டெல்லி பூ மார்க்கெட்டில் கண்டெடுக்கப்பட்ட 3 கிலோ வெடிகுண்டு.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
டெல்லி காஸிபூர் மலர்சந்தையில் 3 கிலோ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மலர்சந்தையில் பை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மிகப்பெரிய மலர் சந்தையான காஸிபூர் மலர்சந்தையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக காஸிபூர் மலர்சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு படை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்
அப்போது மிகவும் ஆபத்தான வெடிகுண்டுகள் 3 கிலோ இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் துணையுடன் கிடைத்த வெடிகுண்டுகளை ஆழமான குழியினை தோண்டி வெடிகுண்டுகளை புதைத்து அதனை செயலிழக்க செய்தனர்.
வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்து போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை வெளியேற்றி அந்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை சீர்குலைக்க நடத்தப்பட்ட பயங்கரவாத முயற்சியாக இது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.