தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலகல கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளைப் போற்றும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படும். இதன்படி, மாட்டுப் பொங்கல் விழா, இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நன்நாளில் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகள் சீவி விட்டு வண்ணம் பூசுவார்கள். அத்துடன் தொழுவத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். இதன்பிறகு மாடுகளுக்கு உணவாக, பொங்கல் படையலிடப்படும். மாட்டுப்பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாட இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மாட்டுப்பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன், திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். முதலமைச்சர் அங்குள்ள கிராம மக்களுடன் மாட்டு வண்டியில், பண்டிகையை உற்சாகமாக கொண்டாட இருக்கிறார். முதலமைச்சரின் வருகையால், உளுந்தை கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் அதிகாலையிலேயே வீடுகளில் கோலம் வரைந்து, வர்ணம் பூசப்பட்ட புதுப்பானையில், புத்தரசியிட்டு, பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர். மஞ்சள், இஞ்சி, கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்தனர்.