நாட்டில் ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு! 402 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 43,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 71,24,278 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 2,65,387 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, டெல்லியிலும் தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது அதன்படி ஒரே நாளில் 24,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்று பாதிப்பு 16.66 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 12.84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 223 நாட்களில் இல்லாத அளவாக கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில் 3.85 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 94.83 ஆகச் சரிந்துள்ளது. கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 199 பேரும், டெல்லியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,041 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.