தமிழருக்காக எப்போதும் துணைநிற்கும் இந்தியா! – தூதுவர் கோபால் பாக்லே உறுதி.
இந்திய அரசு தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணை நிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இந்திய அரசின் நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையகப் பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனைப் பயனாளிகளுக்குக் கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையிலும், இந்தியாவிலும் மாடுகள் தெய்வங்களாகப் பார்க்கப்படுகின்றன. பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்துவதாகும். காரணம் சூரியனே எமது வாழ்க்கைக்கு உதவியளிக்கின்றது.
அதற்கும் மேலதிகமாக திருவள்ளுவர் நாளும் இன்றாகும். வள்ளுவர் பெருமான் உலகுக்கு நல்ல பல நெறிகளை தந்துள்ளார் என்பதை மறக்க கூடாது.
இன்று மலையகத்தை வழிநடத்துபவர்களாக ஜீவனும் தொண்டமானும் செந்தில் தொண்டமானும் உள்ளனர்.
மலையகத்தில் இந்திய உதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்திய வீட்டுத்திட்டங்கள் சில நிறைவடையும் நிலையில் உள்ளன.
இலங்கை மக்களின் தேவையறிந்து இந்தியா செயற்படுகின்றது. இதன்மூலம் இந்திய – இலங்கை உறவு சக்திமிக்கதாய் மாறுகின்றது.
எதிர்காலத்தில் மலையகத்தில் பல வீட்டுத் திட்டங்ளை முன்னெடுப்போம். மலையக நண்பர்களின் வீடுக்கான கனவு நனவாகும்.
அனைத்து தமிழ் மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” – என்றார்.