இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 5ஆவது டெஸ்ட் போட்டி ஹாபாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.
அலெக்ஸ் கேரி 10 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ஆம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஸ்டார்க் (3), கேப்டன் பேட் கம்மின்ஸ் (2) ஆகியோரை ஷார்ட் பிட்ச் பந்து மூலம் மார்க் வுட் வீழ்த்தினார்.
நிதானமாக ரன் சேர்த்து விளையாடிய கேரியை (24) கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தி அதிரடியாக ரன் குவித்த நாதன் லயானை (31) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார். இதன்மூலம், 75.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் (0) ரன் அவுட் ஆக மோசமான தொடக்கமாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அனுபவ வீரர்களான டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் ரன் குவித்தால் இங்கிலாந்து ஸ்கோர் உயரும் என்பதுதான் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கதையாக இருந்துள்ளது.
ஆனால், இந்த இன்னிங்ஸில் எவரும் கைகொடுக்காததால் அந்த அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதன்பின் 115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியும் வார்னர், கவாஜா, லபுசாக்னே ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களுடனும், ஸ்காட் போலண்ட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 152 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது