தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்.. ஆய்வு செய்யும் மருத்துவர்கள் குழு!

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர், கொரோனா தடுப்பூசி போட்டதற்குப் பின்னர் பேசுவதும், நடப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் கடந்த ஜன.4ம் தேதி கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி பக்கவாதத்துக்கு உள்ளாகி பேசும் திறனை இழந்துள்ளார். ஆனால், தடுப்பூசி போட்ட மறுநாளே அவரால், நடக்கவும், பேசவும் கூடிய திறனனை பெற்றுள்ளார்.
இதனை உறுதிப்படுத்திய மருத்துவர்கள் அதிசயமான இந்த நடவடிக்கை குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஜிதேந்திர குமார் கூறுகையில், நடந்த சம்பவத்தை கண்டு வியப்படைகிறேன். இதுபற்றி ஆராய மருத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். நான்கு ஆண்டுகள் மருத்துவ நிலையில் இருந்து வந்தவர் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு குணமடைந்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது என்றார்.
பொக்காரோவின் சால்கதி கிராமத்தைச் சேர்ந்த துலார்சந்த் முண்டா தான் இப்போது மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்த அந்த நபர். இதுதொடர்பாக அவர் கூறும்போது, தான் 4ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் அவரது கால்களை அசைக்க முடிந்ததாகவும், தன்னால் நடக்க முடிந்ததாகவும், பேசவும் முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
துலர்சந்த் முண்டாவின் நோய் மற்றும் அவர் குணமானது குறித்து ஆராய்ச்சி நடத்தும் போது, துல்லியமான தகவல்களும் பதில்களும் வரும் நாட்களில் கிடைக்கும்” என்று பெட்டர்வார் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் அல்பெல் கெர்கெட்டா கூறினார்.
அவரது குடும்பத்தினரின் கூறுகையில், விபத்துக்குப் பிறகு அவர் சிகிச்சை பெற்றார், ஆனால் அவரது உடல் உறுப்பு வேலை செய்யவில்லை. இதனால் அவரது குரலும் தளர ஆரம்பித்தது. 4 லட்சம் ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை. ஆனால் தற்போது அதிசயம் நடந்துள்ளது என்று கூறினர்.