பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், எர்ணாகுளத்தில் உள்ள லுலு மாலுக்கு கட்டணம் வசூலிக்க ஏதேனும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்றும் களமசேரி நகராட்சிக்கு நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.
வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், கட்டட விதிகளின்படி, கட்டடம் கட்டப்படும் இடத்தில் பார்க்கிங்கிற்கு போதிய இடவசதி இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும். அந்த நிபந்தனையுடன் தான் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது.
அப்படியிருக்கும் போது, கட்டிடம் கட்டிய பிறகு தனியாக பார்க்கிங்கிற்கு கட்டணம் வசூலிக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. எனது தனிப்பட்ட பார்வையில் அதற்கு சாத்தியமில்லை என்று கருதுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு களமசேரி நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கை ஜன.28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மலையாள திரைப்பட இயக்குனர் பாலி வடக்கன், கடந்த டிச.2ம் தேதி லுலு மாலுக்கு சென்ற போது, அங்கு அவரது வாகனத்தை நிறுத்துவதற்கு ரூ.20 கட்டணம் செலுத்து வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பார்க்கிங் கட்டணம் செலுத்த இயக்குனர் பாலி மறுக்கவே, மால் ஊழியர் வெளியேறும் கதவுகளை மூடி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து கட்டணத்தை செலுத்தி அவர் வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் பாலி வடக்கன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பார்க்கிங் வழங்குவது என்பது வணிக வளாகத்தின் பொறுப்பே. அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிக்க முடியாது என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
எனினும், இயக்குனர் பாலி வடக்கனின் வாதத்தை முற்றிலும் நிராகரித்த லுலு மால் தரப்பு வழக்கறிஞர், தங்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.