ஓடும் பேருந்தில் மாரடைப்பு: உயிருக்கு போராடிய இளைஞரை முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்!
கேரளாவில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளைருக்கு தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் செவிலியிர் லிஜி (31), இவர் கோட்டயத்தில் உள்ள ஹோலி கிராஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று செவிலியிர் லிஜி, தனது பணியை முடித்து வீடு திரும்ப திருவனந்தபரம் – கொள்ளம் விரைவு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அதேபேருந்தில் ராஜீவ் (28) என்ற இளைஞரும் பயணித்து வந்துள்ளார்.
அப்போது, பேருந்து பரக்குளத்தை அடைந்த போது, நடத்துனர் பயணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, சக பயணிகள் யாரிடமாவது குடி தண்ணீர் இருக்குமா என்று பதட்டத்துடன் கேட்டுள்ளார். அப்போது பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த செவிலியர் லிஜி, மயக்க நிலையில் இருந்த ராஜீவ்வை சோதனையிட்டார். அதில், அவருக்கு நாடித் துடிப்பு நின்றுவிட்டதை உணர்ந்துள்ளார்.
உடனடியாக சக பயணிகளின் உதவியுடன், இளைஞர் ராஜீவ்வை, பேருந்தின் இருக்கையில் இருந்து தூக்கி நடைப்பாதையில் படுக்க வைத்து அவருக்கு சிபிஆர் (CPR) சிகிச்சை கொடுத்துள்ளார். தொடர்ந்து, பேருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வரையிலும் அந்த இளைஞருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து அவரது இதயதுடிப்பை மீட்டு அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக செவிலியர் லிஜி கூறும்போது, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை தான் நான் செய்தேன். மருத்துவமனையில் சிபிஆர் சிகிச்சை செய்திருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் மருத்துவமனைக்கு வெளியில் அதனை செய்ததில்லை. எனது துறையை நினைத்து நான் பெருமை கொள்ளும் தருணங்களில் இதுவும் ஒன்று என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
மேலும், சிபிஆர் சிகிச்சையை அதிகளவில் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், அது இதுபோன்ற அவசர நிலையில் ஒரு உயிரை காப்பாற்ற உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.