கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி முடிவு!
அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நாடு பல்வேறு நெருக்குவாரங்களைச் சந்தித்துள்ள தற்போதைய நிலைமையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தைத் திருதிப்படுத்தும் வகையிலும், தமிழ் மக்களின் மனதை வெல்லும் வகையிலும் கூட்டமைப்புடன் பேச்சுக்கான வியூகத்தை ஜனாதிபதி வகுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாகப் பதவியேற்று இரு வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பு எதையும் நடத்தவில்லை. கடந்த வருடம் ஜனாதிபதி செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய வருடத்தில் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் .
இந்த மாத இறுதி வாரத்தில் இந்தப் பேச்சு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.