எந்தவொரு கட்சியுடனும் அமைக்கத் தயாரில்லை! – தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு.
“அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை முற்றாகத் தகர்க்கப்பட்டதால் கட்சிகளிலிருந்து வெளியேறும் ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியில் வந்து இணைகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் தேசிய மக்கள் சக்தி வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணியை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.”
– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நிர்வாகக் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கட்சி வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளது.
மற்றக் கட்சிகளில் முற்போக்குவாதிகள் யாரேனும் இருப்பார்களாயின் எம்முடன் வந்து இணையலாம். எனினும், கட்சியில் இணைந்துகொள்பவர்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து பார்த்ததன் பின்னரே அவர்களை இணைத்துக்கொள்வோம்.
அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை முற்றாகத் தகர்க்கப்பட்டதால்தான் மக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியை நம்பி அந்தக் கட்சியில் இணையத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் கூட்டணி சேருமாயின் எமது கட்சியில் வந்து இணைந்த மக்கள் மீண்டும் விலகி செல்வார்.
விலகிச் செல்பவர்களுக்கு மீண்டும் இணைவதற்கு ஒரு கட்சி இல்லை. மக்கள் இருக்கும் கட்சிகளிலிருந்து விலகி வருவார்களாயின் அவ்வாறான கட்சிகளுடன் நாம் எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்?
எனவே, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, அரசு என எந்தக் கட்சியிலும் நாம் கூட்டணி அமைக்கப்போவதில்லை.
எனினும், இந்தக் கட்சிகளில் முற்போக்குவாதிகள் யாரேனும் இருப்பார்களாயின் அவர்கள் எம்முடன் வந்து இணைந்துகொள்ளலாம்” – என்றார்.