5 மாநில தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் தலைவர்கள் மும்முரம்!
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் முகாமிட்டு மும்முரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவா மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும், பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் வென்று ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் இலவச குடிநீர், இலவச மின்சாரம், உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கும் சேகரித்தார்.
அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு வாக்களித்து விரக்தி அடைந்த கோவா மக்கள், ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
இதனிடையே, கோவாவில் தங்கள் கட்சி 10 முதல் 15 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், இதுதொடர்பாக தேசிய வாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஷ்கர் முதலமைச்சருமான பூபேஷ் பாகல், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சிலரை போன்று ஜாதி மற்றும் மதத்தை கொண்டு அரசியல் செய்யாமல், காங்கிரஸ் மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பேசுவதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, கான்பூர் கமிஷனர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த அசிம் அருண் உள்ளிட்டோர், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தூய்மையான குணம் கொண்டவர்கள் பாஜகவில் இணைவதாகவும், கலவரக்காரர்கள் தான் சமாஜ்வாதி கட்சியில் இணைவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில், உத்தரபிரதேச அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தாரா சிங் சவுகான், பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ், அசிம் அருணுடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் தேர்தலில் அவருக்கு உதவ வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து போய் விடும் எனவும், அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.