மலையகத்துக்கு சஜித்தை அழைத்து வந்த திகா! மலையகமே ஆரவாரம்! இந்திய உயர்ஸ்தானிகரும் மேடை ஏறினார்! (Video)
தீவிரவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும், மதவெறியர்களுக்கும் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இனவாதம், மதவாதம், தீவிரவாதம் இந்த நாட்டிலிருந்து துடைத்தழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஏற்பாட்டில் நுவரெலியா சினாசிட்டி மைதானத்தில் இன்று (16) இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் நாட்டில் முதன்முறையாக பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு குடியுரிமை வழங்கி பிரஜாவுரிமைக்கான கனவை நனவாக்கியுள்ளதாகவும், துன்பப்படும் மக்களின் வாழ்வை உயர்த்தும் பொறுப்பை தாம் ஏற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை பலமான சமுதாயமாக உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது ஆட்சியொன்றில் வீடுகளில் கேஸ் வெடிக்காது, பால் பவுடரால் எந்தப் பிரச்னையும் இருக்காது, தட்டில் எல்லாம் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எதிர்கால அரசாங்கத்தின் நோக்கம் உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர் சாசனத்தை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்கால ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க தாம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இனவாதம் மற்றும் மதவாதத்தை தாம் தாக்கியதாக தெரிவித்தார்.