ஐயா… எப்படியாவது பாஸ் பண்ணிவிடுங்க… முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்12-ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை
உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கு தற்போது வரை முடிவு காலம் வரவில்லை. உலக அளவில் எந்த நாடுகளாலும் கொரோனாவை அழித்துதொழிக்க முடியவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடத்தில் பள்ளி நடைபெற்ற நாள்கள் அதிகபட்சம் இரண்டு மாதங்கள்தான் இருக்கும். அதிலும் பெரும்பாலும் சுழற்சிமுறை வகுப்புகள்தான். குறிப்பாக, 2020-21-ம் கல்வியாண்டில் சுத்தமாக வகுப்புகள் நடைபெறாததாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்ததாலும் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. அதேபோல, கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிப்பது அவர்கள் கல்லூரி வாழ்க்கையை தொடர்வதில் சிக்கலைக் கொடுக்கும். அவர்கள் கல்லூரி படிப்பைத் தேர்வு செய்ய மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் தேர்வு நடத்த வேண்டும் என்று அப்போது கல்வியாளர்கள் பலரும் கோரிக்கைவைத்தனர். இந்தநிலையில், இந்த ஆண்டும் 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கைவைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தமுறை மாணவர்கள் நேரடியாகவே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்துள்ளனர். திருவள்ளூருக்குச் சென்றுவிட்டு முதல்வர் சென்னை திரும்பும்போது சாலையில் இருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள், ‘ஐயா.. 12-ம் வகுப்பில் தேர்ச்சி செய்துவிடுங்கள்’ என்று கத்தி கோரிக்கைவைத்தனர். மு.க.ஸ்டாலினும் சிரித்துக் கொண்டே சென்றார்