அரசைக் கவிழ்க்க எத்தனிக்காதீர்கள்; மிகவும் பொறுப்புடன் செயற்படுங்கள்!
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் கரங்களாகப் பங்காளிக் கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் இவர்கள் எவரும் ஈடுபடக்கூடாது.”
இவ்வாறு வலியுறுத்தினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசுக்குள் இருப்பவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிடக்கூடாது. அவர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
அரசுக்குள் இருக்கும் ஒரு சிலர் வெளியிடும் விமர்சனங்களை வைத்துக்கொண்டு அரசுக்குள் பெரும் பிளவு என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. எனவே, ஊடகங்களும் உண்மைகளை அறிந்து பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்துக்கொண்டு எதிரணியினரும் தத்தமது அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம் என்று சூளுரைக்கும் சஜித் அணியினர் கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள்? நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை அவர்கள் நாசமாக்கியதை மக்கள் மறக்கமாட்டார்கள். அதற்கான பதிலடிகளைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் , நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் வழங்கியுள்ளனர்.
எமது அரசு சீரான பாதையில் பயணிக்கின்றது. மக்கள் நலன் கருதி இவ்வருடம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்” – என்றார்.