சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநகராட்சி மேயருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியும் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, கரூர் மாநகராட்சி, சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி, ஈரோடு மாநகராட்சி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.