வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் கோட்டா உறுதி.
“வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன. எஞ்சிய காணிகளும் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும்.”
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் நிகழ்த்திய கொள்கை விளக்க உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாப் பெருந்தொற்றிலிருந்து எமது மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவில்லை. தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. வைத்தியசாலை கட்டமைப்புக்கு சுமார் 35 ஆயிரம் கட்டில்கள் இணைக்கப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணப் பொதி வழங்கப்பட்டது.
மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருந்தாலும் நாட்டின் நன்மைதான் அனைவரினதும் இலக்கு. எனவே, அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் பல தடைகள் ஏற்பட்டன. ஆனாலும் எமது பொறுப்பை நாம் மறக்கவில்லை.
நான் ஆட்சிக்கு வரும்போது தேசிய பாதுகாப்புதான் பிரச்சினையாக இருந்தது. அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தினேன். பாதாளக் கோஷ்டியின் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டினேன். மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது” – என்றார்.