சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு
நாடு எதிர்நோக்கும் சவாலை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றிணையுமாறு அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் தூண்டிவிடுகின்ற அரசியல்வாதிகள் அதனை இப்போதாவது நிறுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை இன்று (18) காலை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்ளை உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உலகளாவிய பேரழிவு ஏற்பட்டுள்ள இக்கட்டான நேரத்தில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேசியப் பொறுப்பு அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் ஒரு குறிப்பிட்ட வேலை செய்யப்படும் என்று உறுதியளித்த போதிலும், உலகளாவிய தொற்றுநோய் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எவ்வாறாயினும் அரசாங்கம் தனது அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் மறந்ததில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், மக்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதையும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.
போதைப்பொருளை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் தலைவிரித்தாடும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்த கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை எப்போதும் சர்வதேச சட்டங்களையும் மரபுகளையும் மதிக்கும் நாடு. தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு மனித உரிமை மீறல்களுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை.
இனவாதத்தை நிராகரிப்பதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் கண்ணியத்தையும் உரிமைகளையும் சமமாக பாதுகாக்க விரும்புவதாகவும், எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேநேரம் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு தமது பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
அன்னிய முதலீட்டுக்கு எதிராக பொதுமக்களை தவறாக விளக்கி, அரசியல் உள்நோக்கத்துடன் யாராவது செயல்பட்டால் அது நாட்டுக்கு பாதகமாக அமையும். இந்த நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. தெரிவு செய்யப்பட்ட துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு எதிர்காலத்தில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரச பல்கலைக்கழகங்களின் திறனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டில் உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு இடமளிப்பதா என்பது தொடர்பில் பரந்த விவாதத்திற்கு பாராளுமன்றத்தை அழைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நாடு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழும் மக்களுக்கு சொந்தமானது. இந்த நாட்டின் தற்போதைய அறங்காவலர்கள் நாங்கள் மட்டுமே. இன்று நாம் செயற்படும் விதத்தில் இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்கு நாம் அனைவரும் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.