ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படை தாக்குதல் – 14 பேர் பலி.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர்.
இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தானி என 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் படையை சேர்ந்த முக்கிய தளபதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் துணை வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வான்வெளி தாக்குதலை தொடர்ந்து சவுதி கூட்டுப்படை – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே மேலும் தாக்குதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.