தோல்வியடைந்துவிட்டது அரசு! – மைத்திரி அதிரடி.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது. அரசின் முக்கியஸ்தர்களின் உரைகள், அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இதைப் பறைசாற்றுகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“ஜனாதிபதி ஒரு வழியிலும், பிரதமர் இன்னொரு வழியிலும், அமைச்சர்கள் வேறொரு வழியிலும் பயணித்தால் தத்தளித்துக்கொண்டிருக்கும் அரசை எப்படி நிமிர்த்துவது” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“அரசை வீட்டுக்கு அனுப்புவது எமது நோக்கம் அல்ல. எனினும், இக்கட்டான இந்த நிலையில் தீர்க்கமான முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் என்று ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் அரசின் தலைமை கூறுவது ஆணை வழங்கிய மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயலாகும் என்றும் மைத்திரிபால குற்றஞ்சாட்டினார்.