மைத்திரியின் அற்புத முடிவும், ரணில், மகிந்த இணைந்த சதிராட்ட அரசியலும்

‘ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள நான் சிறிகொத்தவுக்குச் சென்று உறுப்பினராக வேண்டும் எனக் கேட்டிருந்தால் என்னவாகியிருக்கும்…?

மைத்திரி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரான ஒரு நாள் சத்தமாக சிரித்துக்கொண்டே ஊடகவியலாளர்கள் பலர் சூழ்ந்திருந்த போது அவர்களை நோக்கிக் கேட்ட கேள்வி இதுவாகும்.

‘என்ன நடக்கப் போகிறது? உறுப்பினரானதும் , நீங்கள் UNP கட்சியின் தலைவராகியிருப்பீர்கள்’

அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் ஐ.தே.க அரசியலமைப்பின் பிரகாரம் ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியானால், அவர் அக் கட்சியின் தலைவர் ஆகிவிடுவார் என்ற ஐதேக கட்சி யாப்பின் சரத்தை  நினைவுபடுத்தினார்.

‘உண்மையில் மைத்திரி , ஐ.தே.க தலைவராக விரும்பினாரா?’

எனக்கு அது தெரியாது. ஆனால் மைத்திரி வெற்றி பெற்றதும் ஐ.தே.க கட்சியில் உறுப்பினராக அங்கம் வகித்து மைத்திரி, செயற்குழுத் தலைவராக்கியிருந்தால் இன்று ராஜபக்ச என்ற ஒருவரை தேடிக் கூட பிடித்திருக்க முடியாது. அப்படியாகியிருந்தால் இன்றும் நாட்டை ஐ.தே.க.தான் ஆட்சி செய்திருக்கும்.

இதை எல்லோரையும் விட ரணில் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். இதன் காரணமாக மைத்திரியையும் , ஐ.தே.கவையும் பிரித்து வைக்க ரணில் விரும்பினார்.

2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி  ,  பொதுத் தேர்தலை அறிவித்து மஹிந்தவை வேட்பாளராக நிறுத்த  ,  மைத்ரி தீர்மானித்ததை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தல் பிரசாரக் குழுவில் கலந்துரையாடல் ஒன்றில் இருந்த போதுதான் அறிந்து கொண்டார். அப்போதைய ஐதேக பிரசாரக் குழுவில் இருந்த அனைவரும் அதிர்ந்ததோடு , மைத்திரியின் அம்மாவை நினைவுபடுத்தி இழிவாக பேசிய போது , ரணில் அற்புதமான கதை ஒன்றைக் அங்கிருந்தோரிடம் கூறினார்.

தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்தவை, அலரிமாளிகையில் இருந்து வெளியேறி வீட்டுக்கு செல்வதற்குரிய வசதிகளை ஒழுங்கு செய்யவதற்காக , நான் மகிந்தவை சந்திக்கச் சென்றபோது, ​​” மைத்திரியை ஐந்து சதத்துக்கும் நம்ப வேண்டாம். அவர் எனக்குச் செய்ததை உங்களுக்குச் செய்ய மாட்டார் என்று நினைக்க வேண்டாம்” என மஹிந்த என்னிடம் கூறினார் என அங்கிருந்தோரிடம் ரணில் சொன்னார்.

அப்போது மஹிந்த தனக்கு வழங்கிய அறிவுரை முற்றிலும் சரியானது என ரணில் இந்தக் கதையைச் அங்கிருந்தோரிடம் சொன்னார். அன்றிலிருந்து மஹிந்தவின் ஆலோசனையை மனதில் வைத்துக் கொண்டே, மைத்திரியுடன் ரணில் நடந்து கொண்டார். மகிந்தவின்  ஜனாதிபதி பதவிக்கு வேட்டு வைத்தது போலவே , மைத்திரி , ரணிலிடமிருந்த ஐதேக கட்சி தலைமையை பறித்துக் கொள்வார் என ரணில் நினைத்துக் கொண்டிருந்தார். அதற்குத்தான் ரணில் உள்ளூரவே பயந்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்று  , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் ஆனபோது ரணில் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

அது மைத்திரி  ,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவுடன் தன்னைப் பிரதமராக்குவார் என்பதற்காக மாத்திரமல்ல, மைத்திரி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவரானதால் , மைத்ரிக்கு ஐதேக தலைவராவதற்காக வருவதற்காக இருந்த கடைசி வாய்ப்பும் மைத்ரிக்கு இல்லாமல் போனமையால் ஆகும்.

மைத்திரி , ஐ.தே.க.வுடன் நெருங்கி ஐதேகவின் ஆளுமையை அவர் வசமாக்கிக் கொள்வாரோ என இருவர் அச்சத்தோடு இருந்தனர்.

ஒருவர் மஹிந்த. அடுத்தவர் ரணில். மைத்திரி , ஐ.தே.கவுடன் இணைந்தால் ராஜபக்சக்கள் கதையே இல்லாமல் போய் விடுவார்கள் என்பது மஹிந்தவுக்கு தெரியும். அதேபோல மைத்திரி, ஐ.தே.க தலைமையை ஏற்றால் ரணிலின் தலைமை முடிந்துவிடும் என ரணிலுக்கும் தெரியும்.

அத்துடன், மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகி ,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றி அதில் பலமாகி விடுவாரோ என்ற அச்சம் கூட மஹிந்தவுக்கும், ரணிலுக்கும் கூட உள்ளுர இருந்தது.

மைத்திரி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றினால் ,  ராஜபக்சக்களின் சரித்திரமே முடிந்து விடும் என மஹிந்த கணித்துக் கொண்டிருக்கும் போது , மைத்திரி , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள  உறுப்பினர்களது பலத்தை பெற்றால் , தன்னை தூக்கி எறிந்துவிட்டு ,  மைத்திரி  ,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைத்துவிடுவார் என ரணிலும் அஞ்சினார். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை மைத்திரி கைப்பற்ற விடாமல் ஒன்றிணைந்த எதிரணியை மஹிந்த உருவாக்கினார்.

ரணில் , மைத்திரிக்கு  ,  ஐக்கிய தேசியக் கட்சியுடன் உருவாகக் கூடிய நெருக்கத்தை சிதைத்து , மகிந்தவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் பலம் இழக்காமல் இருப்பதற்கு ரணில்  ,  மகிந்தவுக்கு திரைமறைவினூடாக உதவினார்.

மகிந்த – ரணிலின்  , இந்த ஆட்டத்தை மைத்திரி நன்றாகவே அறிந்திருந்தார். மஹிந்தவை பலமிழக்க வைப்பதற்காக , மகிந்த மற்றும் மகிந்தவுடன் நின்ற கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதலில் துரத்தும் வேலையில் மைத்திரி களம் இறங்கினார். மைத்திரியின் , இந்த வேலை திட்டம் வெற்றி பெற்றால்  ,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை மைத்திரி கைப்பற்றிவிடுவார் என அஞ்சிய ரணில், ராஜபக்சக்களையும் கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்களையும் காப்பாற்றினார். துரத்தி , துரத்தி போராடிக்  களைத்துப் போன மைத்திரி , தனது கேமை நிறுத்தினார்.

“ஐ.தே.க ஒரு பாரிய கட்சி என்று நான் நினைத்தேன். கடந்த காலங்களில் ஜே.ஆர்., பிரிமதாசவின் காலத்தில் கிராமசபை ஒன்றை நடத்துவதற்குக் கூட பயந்தோம். அந்த பெரிய கட்சி இப்போது எங்கே? கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி  ,  பாரிய பிரசார பொறிமுறையைக் கொண்டிருந்தது. அந்த பொறிமுறையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்தது. அந்த பிரச்சார பொறிமுறை எங்கே?”

என மைத்திரி ஒருமுறை ஐ.தே.க தலைவர்களிடம் நையாண்டித்தனத்தோடு கேட்டார். மகிந்தவும்  , ரணிலும் நல்ல முகத்தை வெளிப்படுத்திக் கொண்டு ஆடும் ஆட்டத்தில், தன்னை மட்டுமல்ல  ,  ரணிலையும் மஹிந்த துரத்துவார் என்பதை உணர்ந்தே மைத்ரி அப்படிக் கேட்டார்.

மகிந்தவை வெளியேற்றுவது கடினம் என்பதை அறிந்த மைத்ரி , புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஐ.தே.க மீண்டும் ஒரு பெரிய கட்சியாக மாறி ராஜபக்சக்களை ஒழிந்து விடுவார்கள் என நினைத்து  , ரணிலை நோக்கி தனது தாக்குதல்களை வேறோர் வடிவில் தொடங்கினார். ஆனால் மைத்திரி தன்னை அல்ல , ஐதேக கட்சியையே தாக்குகிறார் என, ரணில் , ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு  இனம் காட்டும் வேலையில் இறங்கினார் .

மைத்திரிபால ,  ஐக்கிய தேசியக் கட்சி தலைமையை  மாற்றி  ,  பலமான கட்சியாக  ராஜபக்சக்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் , பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதமராக பதவியேற்குமாறு gyKiw  அழைப்பு விடுத்தார்.

2020 பொதுத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது ரணிலின் ஐ.தே.க பற்றி மைத்திரி , அன்று கூறியது சரியாகவேதான் இருந்தது. 2020க்கு முன்னரே ரணிலின் UNP குறித்து  ,  UNP காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மைத்திரி அன்றே அவதானித்து சொல்லியிருந்தார்.

“சரி, அந்த நேரத்தில் கருவோ அல்லது சஜித்தோ பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?”

அப்படியாகியிருந்தால் இன்றும் ஐ.தே.க. அரசாங்கம் ஒன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும். அல்லது மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாகி , கரு அல்லது சஜித் பிரதமராக இருந்திருப்பார்கள் அல்லது கரு அல்லது சஜித் ஜனாதிபதியாகவும், மைத்திரி பிரதமராகவும் ஆகயிருப்பார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் ராஜபக்சக்கள்  , ஒன்று எதிர்க்கட்சியில் இருப்பார்கள். அல்லது வீட்டுக்கு போயிருப்பார்கள்.

மைத்திரியின் காய் நகர்த்தல்களை  மகிந்த நன்கு அறிந்திருந்தார். மைத்திரி 2018 இல் ரணிலை நீக்கி விட்டு  ,  மஹிந்தவை பிரதமராக்கிய மறுநாள் ,  கோட்டாபய , அலரி மாளிகைக்கு சென்று ரணிலை சந்தித்தார். அவர் ரணிலுக்கு என்ன சொன்னார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

ஆனால் கருவுக்கோ அல்லது சஜித்துக்கோ, பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்து விட்டு , மகிந்த ராஜினாமா செய்யப்போவதில்லை எனும் செய்தியை மகிந்த, ரணிலுக்கு , கோட்டா மூலம் அறிவித்திருக்கலாம்.

2018 ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து மகிந்த வெளியேற்றப்பட்டாலும், பிரதமர் பதவியை விட பெறுமதியான ஒன்று மகிந்தவுக்கு கிடைத்தது. அதாவது மைத்திரிக்கும், ஐ.தே.க.வுக்கும் இடையில் நிலவி வந்த , உறவு நிலை முற்று முழுதாக தொலைந்து , இன்னொரு ஐ.தே.க தலைவரால் கூட மைத்திரியோடு இணையும் வாய்ப்பு இனி ஒருபோதுமே இணைய முடியாதபடி  இல்லாமலே போனது.

இப்போது மைத்தரி, மகிந்தவின் அல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் பொது எதிரி , தானே என்பதை மைத்திரி உணர்ந்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதை மைத்ரி உணர்ந்தார். ஐதேகவின் ஆரம்ப தலைவர் டிஎஸ்ஸை குழியில் இருந்து வெளியே கொண்டு வந்தால் மட்டுமல்ல, சஜித்தால் கூட, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற வைக்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50% ஐப் பெறுவதற்கு ராஜபக்சக்களுக்கு  ,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை என்பதை மைத்ரி அறிந்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமது ஜனாதிபதி அதிகாரத்தை இல்லாமல் செய்ய ராஜபக்சக்கள் விரும்புவதையும் ,   மைத்ரி அறிந்தேயிருந்தார். இந்த இருவிடயங்களையும் சாமர்த்தியமாக  அறிந்து ராஜபக்சக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி  ,  பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கொண்டார். கோட்டா ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது நாட்களுக்குள் தனது முகநூலில் ஒரு அற்புதமான குறிப்பை இப்படி எழுதினார்.

‘இலக்குகளை அடைய , சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்’
மைத்திரிபால சிறிசேன
முகநூல்
2019.12.07

கோவிட் நோய் நாட்டுக்குள் பரவுவதற்கு முன்பே மைத்ரி மேல் கண்ட குறிப்பை வெளியிட்டார்.

‘இந்த அரசாங்கம் இப்படி வீழும் என மைத்திரிக்கு எப்படி முன்கூட்டியே தெரிய வந்தது?’

ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஆதரவில்லை என்பது ,  ஜனாதிபதியானவுடனேயே மைத்திரிக்கு தெரியும். அவர் ஐ.தே.க. அரசு ஒன்று நடந்து கொண்டிருந்த போது , அந்த அரசின் தலைவர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக ரணில் மற்றும் ஐ.தே.க.வுடன் தனது இருப்பிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்தான்  உள்ளது என்பதை  உணர்ந்து உள்ளக போரோன்றில் ஈடுபட்டார்.

ரணில் கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் போது ,  அந்த அமைச்சரவை பத்திரத்தை தூக்கி எறிந்தார். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை – இந்திய கூட்டு முயற்சியின் கீழ் கட்டுப்படுத்தும் பிரேரணையை ரணில் அரசாங்கம் கொண்டு வந்த போது அதற்கு எதிராக குரல் எழுப்பி தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு உத்தரவிட்டார். அரச சொத்துக்களை விற்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையல்ல என்று கூறி இவை அனைத்தையும் செய்தார்.

இன்று கோட்டாவின் அரசாங்கம் அரச சொத்துக்களை ஏலம் விடுகின்றது. கெரவலப்பிட்டி அனல்மின் நிலையம் அமெரிக்காவிற்கு விற்பனை! திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான ரணில் அரசாங்கத்தின் பிரேரணைக்கு அப்பால் சென்று, இந்தியாவுக்கு , தாங்கிகளின் கட்டுப்பாட்டை சாதகமாக வழங்கியுள்ளது. இந்த அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல்ல. ஐ.தே.க. கொள்கைகளை நிலைநாட்டும் அரசு. இதன் காரணமாக ,  இலங்கை பொதுசன முன்னணியைச் (மொட்டு கட்சி) சுற்றி திரண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர்.

‘மைத்திரி அவர்களை வழி நடத்துவாரா?’

மொட்டு கட்சியின் அலை வீசிய  , 2018ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைத்ததாக சொன்ன மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  ,  12 லட்சம் வாக்குகளைப் பெற்றது . இன்று ராஜபக்சக்கள் அமெரிக்காவிற்கும் , இந்தியாவிற்கும் காவடி எடுக்கும் போது அந்த 12 லட்ச வாக்குகளை மேலும் அதிகரிப்பது என்பது பெரிய விடயமேயல்ல.

இது ராஜபக்சக்களுக்கு இது தெரியும். ராஜபக்ஷக்கள் , மைத்திரியை தாக்குவதற்கு அஞ்சுவதற்கு காரணம் , ஶ்ரீலங்காவில் உளுத்து போன ஆதரவாளர்களே தம்மோடு இருப்பதை அறிந்திருப்பதோடு, தனது அரசாங்கம் , அரச சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்க்கும் இடதுசாரி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கூட மைத்திரியைச் சுற்றி அணி திரள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ராஜபக்ச தரப்பினர் நன்கு அறிவார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் , ராஜபக்சவுக்கு எதிரான கூட்டணிக்கு மைத்திரி அழைத்துச் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் , ராஜபக்சக்கள் மைத்திரியை தாக்குவதற்கு ஐ.தே.க.வைப் வக்கிரமாக பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற 1947 முதல் 2005 வரை ஐ.தே.க. மற்றும் ஐ.தே.க. எதிர்ப்பு அரசியல்தான் இருந்து வந்தது. 2005க்குப் பின்னர் ஐ.தே.க.வின் மகத்தான சரிவு மற்றும் மகிந்த யுத்த வெற்றியின் காரணமாக ,  அது ராஜபக்ச ஆதரவு மற்றும் ராஜபக்சவுக்கு எதிரான அரசியல் என மாற்றம் பெற்றது. இந்த ராஜபக்ச எதிர்ப்பு அரசியலை உருவாக்கியவர் மைத்திரிதான். 2015ல் கட்சி, நிறம், இனம், மதம் எதுவுமின்றி ராஜபக்சவுக்கு எதிரான அரசியலை முன்னுக்கு கொண்டு வந்து மைத்ரி வெற்றி பெற்றார்.

அந்த ராஜபக்ச எதிர்ப்பு அரசியல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதற்கு இயற்கையின் வக்கிரமும், ராஜபக்ச ஆட்சியின் பலவீனமும்தான் காரணம். 2015ஆம் ஆண்டு ஏற்படுத்திய ராஜபக்ச எதிர்ப்பு அலையின் மீள் எழுச்சியால் மைத்ரி உத்வேகம் அடைந்துள்ளார். கடினமாக உழைத்து பலனைப் பெற பொறுமையாக இருக்க வேண்டும் என்று சில காலத்திற்கு முன்பு முகநூலில் மீண்டும் ஒரு குறிப்பைப் போட்டிருந்தார்.

SLFP ஊடாக இலங்கை பொதுசன முன்னணியுடன் (மொட்டு கட்சி) இணைந்து 2019 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிக்கு பங்களித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணியின் தலைவராகவும் ஆனார். அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரிப்பது போல அவர் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  ,  பொதுஜன முன்னணியில் இருந்து பிரித்தெடுக்க ஆரம்பித்துள்ளார்.

‘சில அத்தியாயங்கள் சோகமானவை. வேறு சில அத்தியாயங்கள் சாகசமானவை. சவாலான அத்தியாயங்கள் இல்லாமல் இல்லை. ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சரியான புத்தகத்தை சரியான நேரத்தில் எழுதுவார். ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் இறுதி அத்தியாயம் அற்புதமானது.

ஆகஸ்ட் 2021ல் முகநூலில் மைத்ரி போட்ட குறிப்பு இது.

இது மைத்திரியின் அற்புத அத்தியாயத்தின் ஆரம்பமா ? முடிவா?  என இப்போது சொல்லத் தெரியவில்லை.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.