ரஷியா படையெடுக்கலாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி உக்ரைன் விரைவு…!
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் மால்டோவா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷிய பாதுகாப்பு படையினர் மீது ரஷிய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என உக்ரைன் மீது ரஷியா குற்றஞ்சாட்ட உள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க உள்ளதாக சமீபத்தில் அமெரிக்கா தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று உக்ரைன் சென்றுள்ளார். ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
இந்த பயணத்தின் போது உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கியை ஆண்டனி பிளிங்கன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது எல்லையில் ரஷிய படைகள் குவிப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பிளிங்கனின் உக்ரைன் பயணம் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலேயே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பெர்லின் செல்லும் பிளிங்கன் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் உக்ரைன் எல்லை பிரச்சினை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.