ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு புதிய இளம் பெண் தலைவர் தேர்வு.
பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்பவுர்க் நகரில் நடந்த முழுமையான அமர்வில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராக ராபர்ட்டா மெட்சோலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகச்சிறிய நாடான மால்டாவைச் சேர்ந்தவரான இவர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3-வது மற்றும் மிக இளம் வயது பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது குறித்து ஐரோப்பிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மான்பிரெட் வெப்பர் கூறுகையில் “ஒரு சிறிய நாட்டில் இருந்து நம்பிக்கையான, இளம் பெண் தலைவர் நமக்கு கிடைத்துள்ளார்” என தெரிவித்துள்ளார். தற்போது 43 வயதாகும் ராபர்ட்டா மெட்சோலா, மால்டா தேசியவாத கட்சியின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.