சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தொடர்பாக இன்று(19.01.2022) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப உரை நாட்டு மக்களுக்கு ஒளி வீசும் நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது.

வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத்தீவு கொவிட் 19 காரணமாக எதிர்கொள்ளும் சவால்களை யதார்த்தமாக தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.
சக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயங்களை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டதும், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேவைகள் தொடரும் என்ற அவரது பெருந்தன்மை மிக்க கூற்றுகளும் அவரது அரசியல் நிலைப்பாட்டை பறைசாற்றி நிற்கிறது.

ஜனாதிபதி தனது உரையில், இனவாதத்தை நிராகரிக்கின்றோம் என்றும் நாட்டில் வாழும் சகல பிரஜைகளும் கௌரவத்துடன் வாழ்வதற்கும், அவர்களது அனைத்து உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் திறந்த மனத்துடன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து சக தமிழ் கட்சி தலைமைகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு அரசியல் தீர்வு குறித்து நம்பிக்கையோடு செயலாற்ற முன்வர வேண்டும்.

அது மட்டுமன்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கௌரவ கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் நாம் உரிமையோடும் தேசிய நல்லிணக்க ஒழுங்கு முறையிலும் முன்வைத்த விடயங்கள் குறித்தும் தனது உரையில் தெரிவித்துள்ளமை எமக்கு நம்பிக்கையை தருகின்றது.

காணாமல் போனோருக்கு நீதியும் பரிகாரமும் வழங்குவோம் என தெரிவித்துள்ளார். சிறையில் வாடும் கைதிகளை விடுவித்து வருவது குறித்து பேசியுள்ளார். அது மட்டுமன்றி யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, படையினரின் பயன்பாட்டில் இருந்த 90 வீதமான நிலங்களை விடுவிப்பதற்கு தான் முயற்சி எடுத்தமை குறித்து பேசியுள்ளார்.
இதில் எனது பங்கோடு பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்களை அவர் விடுவித்து தந்திருக்கிறார் என்பதை நான் கூறி வைக்க விரும்புகிறேன்.

இன்னமும் விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிப்பதாகவும் அவர் தனது உரையில் உறுதியளித்துள்ளார். அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் குறித்தும் நியாமான முடிவுகளை எடுப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளை தனது உரையில் யதார்த்தபூர்வமாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை தற்காலிகமாக தவிர்த்து விட்டு, தான் எடுக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

உரையை முழுமையாக படித்து முடித்தார்களோ, அல்லது செவி மடுத்தார்களோ தெரியாது. அதில் ஒன்றும் இல்லை என்றும், குப்பை என்றும் வழமை போல் கூச்சலிடத் தொடங்கி விட்டார்கள்.

13 வது திருத்த சட்டத்தை துப்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம் என்று நிராகரித்து விட்டு, இன்று சுடலை ஞானத்தில் அதையே தூசி தட்டி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் இன்றைய கொள்கை பிரகடனங்களையும் தூசு தட்டி பார்க்கக்கூடும்.

அரசியல் வேறுபாடுகளை ஒரு புறம் வைத்து விட்டு வாருங்கள் முன்னோக்கி செல்வோம் என்றுதான் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கொள்கையை ஒருபுறம் வைத்து விட்டு வாருங்கள் என்று கேட்டதாக அந்த உரையை திரிபு படுத்தி கூச்சலிடுவோர்களிடம் கேட்கிறேன். முண்டாட்சியில் உங்கள் கொள்கையை விற்று யாரிடம் எதை பெற்றீர்கள்?

மக்களிடம் இருந்து நீங்கள் அபகரித்த ஆணைக்கு என்ன மதிப்பளிதீர்கள்? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் ஞானசூனியங்களாக இருப்பதில் அர்த்தமில்லை.

கண்மூடித்தனமாக சுயலாப அரசியல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்கிறேன். எள்ளை கொடுத்தால் எண்ணைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் அரசியல் சுயலாபங்களே தமிழ் மக்கள் மீது அவலங்களையும் அழிவுகளையும் சுமத்தியிருக்கிறது.

சும்மா இருக்க சுதந்திரம் வந்து சேராது, சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக்காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதியின் உரையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு தமிழ் பேசும் மக்களின் வாழ்விலும் சுபீட்சமான ஒளி வீசும் காலத்தை உருவாக்க அனைத்து வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக வேண்டும் என நான் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.