நாடாளுமன்ற மிளகாய்ப் பொடி தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ரணிலும் மஹிந்தவும் இணைந்து நிறுத்தினர்: கரு குற்றச்சாட்டு

2018 ஆட்சிக் கவிழ்ப்பின் போது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பில் உரிய விசாரணை நடத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதமர் மஹிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழுத்தங்களினால் விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக திரு.ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நாட்டின் துரதிஷ்ட நிலை காரணமாக, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல முக்கிய பிரமுகர்களினால் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் முதன்முறையாக நடந்தவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைதியின்மைக்கு மத்தியில் தன் மீது ஆசிட் வீச்சுக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், குறிப்பாக அரசியலமைப்பின் 20வது திருத்தம் நாட்டுக்கு மிகவும் ஆபத்தான அரசியலமைப்பு திருத்தம் என குறிப்பிட முடியும் எனவும் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
‘அரசியலமைப்பு சதியின் போது பாராளுமன்றத்திற்கு மிளகாய் பொடியை கொண்டுவந்து, கதிரைகளை வீசி, பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்கும் திட்டங்களை , கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்தே திட்டமிடப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை, மீண்டும் பதவியில் அமர்த்துமாறு கோரி, அந்த ஜனநாயகத்துக்காக கடுமையாக போராடிய போதிலும், அதிகாரத்திற்காக நாம் ஏமாந்து போனால் இவ்வாறானதொரு அரசியல் உலகில் வாழ்வது பெரும் ஏமாற்றத்தையே தருகிறது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வேதனையோடு தெரிவித்துள்ளார்.
‘சந்தேஷய பை சரோஜ்’ யூடியூப் அலைவரிசையின் சார்பில் ஊடகவியலாளர் சரோஜ் பத்திரனவுடனான விசேட நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு மனம் திறந்து பேசியுள்ளார்.
அரசியலமைப்பு சதி நடந்த போது , வயோதிப விடுதியொன்றின் நிகழ்வொன்றில் தான் கலந்து கொண்டிருந்த வேளையில் , தனக்கு அங்கு வைத்து அசிட் வீசும் முயற்சியொன்று நடந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியின் சிங்கள காணோளி:-