இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்காகக் காத்திருக்கின்றோம்! – தூதுவரிடம் சம்பந்தன் தெரிவிப்பு.
“நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியாவில் இருக்கும் சமயத்தில் நாங்களும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அங்கு வந்து இந்திய அரசை தர்மசங்கடத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. அதனாலேயே அந்தப் பயணத்தை அப்போது ஒத்திப்போடும் முடிவை எடுத்தோம். இப்போதும் இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்காகக் காத்திருக்கின்றோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் தமிழ்க் கட்சிகளின் இந்தியப் பிரதமர் மோடிக்கான ஆவணம், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டது. இதன்போது இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சென்றிருந்தார். இந்தியப் பிரதமரை சந்திக்க அவர் முயற்சித்திருந்தும் அது வெற்றியளிக்கவில்லை. இந்தநிலையில் அதே காலப் பகுதியில் இந்தியப் பிரதமரை சந்திக்க வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒத்திவைத்திருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மகனின் திருமணம் காரணமாக அவர் கலந்துகொள்ள முடியாது என்றும், தனது கடவுச் சீட்டு காலாவதியாகிவிட்டது என்றும், நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட வாக்களிப்பு நடைபெறவுள்ளது என்றும் காரணங்களைக் கூறி அதனை ஒத்திவைத்திருந்தார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியாவில் நிற்கும்போது கூட்டமைப்பினரும் அங்கு வருவது இந்திய அரசை தர்மசங்கடத்துக்குள்ளாகும். அதனாலேயே வரவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இதன்போது இந்தியத் தூதுவர், தமது அரசுக்கு அவ்வாறானதொரு தர்மசங்கட நிலை ஏற்பட்டிருக்காது என்று பதிலளித்தார்.
இதேவேளை, இந்தியப் பிரதமரை மீளவும் சந்திப்பதற்கான கோரிக்கையையும் இரா.சம்பந்தன் முன்வைத்தார். தற்போதுள்ள கொரோனா நிலைமை சுமுகமாகிய பின்னர் சந்திப்புக்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வதாக இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.