காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு?
முன்னாள் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் றூட் அவர்கள் ,கடந்த மாதம் வெளியாகிய அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் சீன-அமெரிக்க எதிர்கால உறவு குறித்து கட்டுரை ஒன்றினை வரைந்துள்ளார்.
அதில் சீனாவின் புதிய அதிபர் சி சின்பிங் உடன் ,ஆசியாவின் மூலோபாய ஸ்திரநிலைமை (Strategic stability ) குறித்த பொதுவான இணக்கப்பாட்டினை நோக்கி அமெரிக்காவால் நகர முடியுமென்கிற வகையில் அவரின் செய்தி அமைந்திருந்தது.
இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் உருவான யப்பானிய இராணுவமயம், பின்னர் சோவியத் யூனியனிற்கு மாற்றீடான மூலோபாய நகர்வுகள், இதன் நீட்சியாக யப்பான் மற்றும் தென் கொரியாவில் நிலை கொள்ளல் போன்றவற்றின் ஊடாக அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டாலும் , கிழக்கு மற்றும் தென் சீனக்கடற் பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை மிகவும் சிக்கலானது என்று கெவின் றூட் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இருப்பினும் கிழக்கு ஆசியா போலல்லாது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவினுடைய மூலோபாய திட்டங்கள் வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும் .
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ,அதன் சீனாவிற்கான கனிமவள ஏற்றுமதி பொருண்மியரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆகவே அவுஸ்திரேலியாவின் சீனாவுடனான பொருளாதார நலன் சார்ந்த உறவு, அமெரிக்க -சீன மூலோபாய இணக்கப்பாட்டிலும், அவற்றிடையே உருவாகும் முரண் நிலையற்ற போக்கிலுமே தங்கியுள்ளது. இதனை கெவின் ரூட் ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, சீனாவுடன் முழுமையான இருதரப்பு பொருளாதார உடன்படிக்கையை மேற்கொண்டுள்ள தைவானிற்கும், பரஸ்பரம் முதலீடுகளை குவித்துள்ள தென் கொரியாவிற்கும் இது பொருந்தும்.
ஆனாலும் ஆசியாவில் , அமெரிக்க நட்பு வட்டத்துள் வாழ்ந்து கொண்டிருக்கும் பல நாடுகள், உலகின் இரண்டாவது பொருண்மிய பலவானாகவிருக்கும் சீனாவோடு பலவீனமான இராஜரீக தொடர்பாடல்களைக் கொண்டிருந்தாலும், சந்தைப் பொருளாதார களத்தில் நெருக்கமான உறவோடுதான் இருக்கின்றன.
2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியினால் ,ஐரோப்பாவில் பல பாதிப்புகள் உருவாகின. இதன் எதிர்வினையாக அமெரிக்க ஆதரவு ஆசிய நாடுகளின் ஏற்றுமதியில் பின்னடைவுகள் ஏற்பட்டன. கையிருப்பிலுள்ள தங்கத்தை விற்று உள்நாட்டு -வெளிநாட்டுக் கடன்களை அடைக்க வேன்டிய இக்கட்டான நிலைக்கு சைப்பிரஸ் தள்ளப்பட்டிருப்பதை இப்போது காண்கிறோம்.
மேற்குலகின் பொருளாதாரத் தேக்கநிலை, சீனாவின் வளர்ச்சி வீதத்தை 7.6 ஆகக் குறைத்துள்ளது. தங்கத்தை விற்றுப் பிழைக்க வேண்டிய அளவிற்கு ஜப்பானும் தடுமாறுகிறது.
இந்நிலையில், சீனாவின் வளர்ச்சி ஆபத்தானதல்ல, அதுவொரு அமைதியான எழுச்சி என்கிற விவாதங்களில் இதுவரை ஈடுபட்டோரை ,கடந்த மூன்று மாத கால சீனாவின் பொருண்மியப் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
சீன பொருண்மியக் கட்டமைப்பில் சடுதியான மாறுதல்களைச் செய்த டெங் சியாவோபிங்கின் பிரபல்யமான வாசகமான, ‘ உனது பலத்தை மறைத்திரு. காலத்திற்காகக் காத்திரு ‘என்பதுகூட ,சந்தைப் பொருளாதாரத்தின் பலம் சந்தைகளோடு சார்புடையது என்பதனை நிராகரித்துவிட முடியாது.
திறைசேரியில் வைத்திருக்கும் ட்ரில்லியன் கணக்கான வெளிநாட்டு நாணயக் கையிருப்பா தனது பலமென்று சீனா நினைக்கிறது?. அல்லது மேற்குலகின் ஆதிக்கத்தில் இருக்கும் சர்வதேச நிதிக் கட்டமைப்புக்களுக்கு மாற்றீடாக ‘பிரிக்ஸ்’ (பிரிக்ஸ்) மூலம் புதிய நிதியியல் நிறுவனங்களை உருவாக்கும்வரை , அதற்கான காலத்திற்காகக் காத்திருக்கப்போகிறதா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
அதேவேளை இலங்கை குறித்தான சீனாவின் அணுகுமுறையில், இந்த காலத்திற்காகக் காத்திருக்கும் கொள்கை,எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி விவகாரம் ,உலக வல்லரசுகள் மட்டத்தில் ‘முத்துமாலைத் திட்டம்’ என்று பெரிதாகப் பேசப்படும் அதேவேளை, அரச இயந்திரத்தின் முக்கிய காப்பரணான படைத்துறையோடு சீனா கொண்டுள்ள நெருக்கமான செயற்பாட்டு மூலோபாய உறவு குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது.
விடுதலைப் புலிகள் உடனான இறுதிப்போரில் வழங்கிய பாரிய படைக்கல உதவிகள், பூநகரி படைத்தள விரிவாக்கம், வன்னியில் இராணுவ குடியிருப்பு நிர்மாணம் என்பவற்றோடு தற்போது படைத்துறைக்கான பல்கலைக்கழக நிர்மாணிப்பிலும் சீனா ஈடுபடுகிறது.
உள்ளூரில் திரட்டப்படும் 202 மில்லியன் டொலர் நிதியில், 1986 இல் தரமுயர்த்தப்பட்ட கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் (KDU), போதனா வைத்தியசாலை ஒன்று உருவாக்கப்படுகிறது.
704 படுக்கைகளைக் கொண்ட இப்போதனா வைத்தியசாலை கட்டும் ஒப்பந்தத்தில், பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசும், சீன நிறுவனமொன்றின் உபதலைவர் வாங் சிங்கே வும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராஜபக்ச முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
படைத்துறைக்கான சீனாவின் உதவும்கரங்கள் வைத்தியசாலைவரை நீண்டு செல்ல, சென்மதிநிலுவை(balance of payment) குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் அரசு, ஜி.எஸ்.பி.பிளஸ் (GSP+) வரிச் சலுகையை சீனாவிடமிருந்து பெற முடியுமாவென்று எதிர்பார்க்கின்றது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி.பிளஸ் தடையால் பல ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அதில் முதலீடு செய்த பல கம்பனிகள் வங்காளதேசத்தில் குடிபுகுந்து விட்டன. மியன்மாரிலும் புதிய உற்பத்திக் களங்கள் விரைவில் திறக்கப்படுமென தெரிய வருகிறது.
தேயிலை சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஈரான் மீதான அமெரிக்கத் தடை, வெளிநாட்டில் பணி புரிவோர் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சரிவு என்பன நாட்டின் பொருளாதாரத்தில் பாரியளவில் தாக்கங்களை ஏற்படுத்துவதால், மாற்றுவழிகளை தேட முயற்சிக்கிறது அரசு.
வருடாவருடம் அமெரிக்கா வழங்கும் நன்கொடைத் தொகையின் அளவு , இந்த வருடம் 20 சதவீதத்தால் குறைக்கப்படலாம் என்று செய்திகள் உலா வரும் நிலையில் ,இலங்கை அதிபர் விரைவில் சீனாவிற்குப் பயணம் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.