ஆன்லைனில் வரன் தேடிய பெண்களுக்கு வலை வீசி லட்சக்கணக்கில் சுருட்டிய இளைஞர்.. விசாரணையில் பகீர்!
மும்பையில் திருமண தகவல் மைய இணைய தளங்களில் விளம்பரம் செய்த பெண்களிடம் பழகி லட்சக்கணக்கில் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியபோது, விஷால் சௌஹான் என்ற இளைஞர் திருமண தகவல் மைய இணையதளத்தில் போலியான தகவல்கள் கொடுத்து பதிவு செய்து வைத்து கொண்டு, பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக செல்வாக்கான பின்னணி கொண்ட பெண்களுக்கே வலை வீசி வந்துள்ளார். மேலும், பெரும் மொபைல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்ற மோசடியில் அந்த இளைஞர் ஈடுபட்டு வந்துள்ளார்.
எனினும், இந்த சம்பவம் குறித்து ஒரு பெண் மட்டும் புகார் அளிக்க முன்வரவே, இந்த மோசடி மன்னன் குறித்து முழு விவரமும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மும்பை காஞ்சுர்மார்க்கை சேர்ந்த 28 வயது பெண் வரன் தேடி திருமண தகவல் மைய இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அதை பார்த்து இளைஞர் ஒருவர் போன் செய்துள்ளார். பின்னர் இருவரும் போனில் பேசி பழகி வந்துள்ளனர். அந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்ற அவர் பெற்றோரின் அவசர மருத்துவ சேவைக்காக 2.5 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கேட்டுள்ளார். அவரின் பேச்சை நம்பிய அந்த பெண்ணும் பணத்தை இளைஞரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு அந்த நபர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வங்கி கணக்கை வைத்து தேடிய போது போலி முகவரியாக இருந்தது. இதேபோல் மற்றொரு பெண்ணிடம் பழகி பங்குசந்தையில் முதலீடு செய்வதாக 17 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு சயான் காவல்நிலையத்தில் பதிவாகி இருந்தது.
அதைவைத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் 28 வயதான விஷால் சௌஹான் என்பதும் மேட்ரிமோனி இணையதளத்தில் தங்களது போன் எண்களுடன் விவரங்களை பதிவிடும் பெண்களை குறிவைத்து மோசடியை அரங்கேற்றி வந்ததும் தெரிய வந்தது.