கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்.
ஜனாதிபதி கோட்டபாயராஜபக்சவின் எண்ணக்கருவில் உதித்த சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைவாக ஒரு இலட்சம் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது.
வரவு செலவு முன்மொழிவுகளின் போது விசேட முன்னுரிமைகளை வழங்கி பிரதேச மற்றும் மாவட்ட நிருவாகத்தின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ள கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் திட்டங்களை ஒரே தடவையில் ஆரம்பிக்கும் நிகழ்வு, இவ்வாண்டு பெப்ரவரி 03 (வியாழக்கிழமை) மு.ப 8.52க்கு உள்ள சுபவேளையில் கிழக்குத் திசை நோக்கி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தின் போது அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கருத்து தெரிவிக்கையில் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்து குறைந்தது ஐந்து திட்டங்கள் வரை தெரிவு செய்து எதிர்வரும் பெப்ரவரி 03ஆந் திகதி நடைமுறைப்படுத்தவேண்டும் என ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தினூடாக கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதாரம், சமூக நலம், தொழில் முயற்ச்சியாளர் ஊக்குவிப்பு போன்ற பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்படவுள்ளன.