‘ஒரு மாவட்டம் ஒரு விமான நிலையம் திட்டம்’ – ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..

‘ஒரு மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விமான நிலையம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதுமையான திட்டங்களை புகுத்தி அதிரடி காட்டி வருகிறார். இருப்பினும் மூன்று தலைநகரங்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அத்திட்டத்தை அவர் சமீபத்தில் கைவிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஆந்திராவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். அதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆந்திராவில் மொத்தம் 13 மாவட்டங்கள் உள்ளன. விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி, கர்னூல், ராஜமகேந்திரவரம் மற்றும் கடப்பா ஆகிய 6 விமான நிலையங்கள் தற்போது ஆந்திராவில் செயல்பாட்டில் உள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் தலா ஒரு விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்டமிடல் பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த விமான நிலையங்கள் அனைத்தும் ஒரே அளவுடையவையாகவும், போயிங் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 12 மாவட்டங்கள் உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், புதிய மாவட்டங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்படுமா என்பது குறித்து விளக்கம் தரப்படவில்லை.

ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் 6 விமான நிலையங்களின் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் அதிகாரிகளை பணித்துள்ளார். விழியநகரம் மாவட்டத்தின் போகாபுரம் பகுதியில் புதிதாக கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்காக ஜி.எம்.ஆர் குரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாகி வருவதால் விமான நிலைய கட்டுமாணப் பணிகள் ஓராண்டாக தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

இதே போல நெல்லூர் மாவட்டத்தின் தகதர்த்தி பகுதியில் விமான நிலையம் அமைக்க முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்தார். இருப்பினும் புதிய டெண்டர் ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்திய விமான நிலைய ஆணையம் விஜயவாடா விமான நிலைய விரிவாக்கத்தை கையில் எடுத்து, ஓடுபாதையை விரிவாக்கும் பணியை முடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.