மினுவாங்கொடையில் திருமணக் கொத்தணி! – மணமகன் உள்ளிட்ட 26 பேருக்குக் கொரோனா.

கம்பஹா, மினுவாங்கொடை – கமரகொட பிரதேசத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இவர்களில் மூத்த சகோதரன் உள்ளிட்ட 26 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தலங்க பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இரண்டு திருமணங்கள் இடம்பெற்றுள்ளன.
திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், திருமண நிகழ்வில் சுமார் 350 பேர் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவருகின்றது.
மணமகன் உள்ளிட்ட ஐவருக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதனையடுத்து 28 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கமரகொட பிரதேசத்திலுள்ள பலர் தற்போதைய நிலையில் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.