வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மெத்தனப்போக்கான அபிவிருத்தியால் மக்கள் அசௌகரியம்.
அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு கிராமம் ஆரம்பிக்கும் தேவாலய சந்திமுதல் காரைதீவு பிரதேச செயலக முடிவு வரை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்ட வீதியபிவிருத்தியில் சீரின்மை காரணமாக வாகனங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகளும், பாதசாரிகளும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பல மாதங்களாக மேற்குறித்த பிரதேசத்தில் வீதியை இருவழிபாதையாக மாற்ற வீதியின் நடுவில் கொங்கிரீட் தூண்களை கொண்டு பிரித்திருந்த நிலையில் இரவுவேளைகளில் அதன்மூலம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்ததுடன் விமர்சனங்களும் எழுந்தது. அதனையடுத்து வீதியை அகலமாக்குவதற்கு தீர்மானித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அவசர அவசரமாக காபட் வீதியின் மேல் மேலும் அஸ்பால்ட் இட்டு சீரணமுறையில் மட்டப்படுத்தாமல் விட்டதன் காரணமாக மாளிகைக்காடு கிராமம் ஆரம்பிக்கும் தேவாலய சந்திமுதல் காரைதீவு பிரதேச செயலக முடிவு வரை வீதி கடுமையானமுறையில் பழுதடைந்து வாகனங்களை சீரான வேகத்தில் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதுடன் வாகனங்களும் அலறி பழுதாகும் நிலை தோன்றியுள்ளது.
கல்முனை- அக்கறைப்பற்றை இணைக்கும் குறித்த வீதி நெடுந்தூரம் பயணிப்பவர்களுக்கு பிரதான வீதியாக அமைந்துள்ளதுடன் ஒருநாளைக்கு சுமார் 8000 க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் வீதியாக அமைந்துள்ளது.
இதனால் இவ்வீதியை பாவிக்கும் மக்கள் கடுமையான சிக்கல்களை அனுபவித்து வருவதனால் வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்காக பாவிக்கப்பட்ட கனரக வாகனங்களும் இதுவரை அகற்றப்படாமல் அவ்விடத்திலையே தரித்து நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடி நிலைகள் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.