‘2024ல் பாஜகவை வீழ்த்த முடியும்.. ஆனால்..’ – புள்ளிவிவரத்துடன் பேசிய பிரசாந்த் கிஷோர்
எதிர்வரும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவே வெற்றி பெற்றாலும் கூட 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2014, 2019 என தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது பாஜக. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி இதே தேர்தல்களில் படுதோல்வி அடைந்து பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் பரிதாப நிலைக்கு சென்றது. பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என பல கட்சிகளுக்காகவும் பணியாற்றிய பிரபல தேர்தல் வியூக நிபுணரும் ஐ-பேக் நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்து பேசியுள்ளார்.
என்.டி.டி.விக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், எதிர்வரும் தேர்தல்களில் கட்சிகளின் வியூகங்கள் எப்படி அமைய வேண்டும் என மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பதில்களை தற்போது பார்ப்போம்..
2024ல் பாஜகவை தோற்கடிக்க முடியுமா?
இதற்கு பதில் அழுத்தமாக ஆம். ஆனால் தற்போதுள்ள கட்சிகள் மற்றும் கூட்டணிகளால் இது சாத்தியமா என்றால் இல்லை என்றே கூறுவேன்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கத் தேவையில்லை. இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட 2024ல் பாஜகவை தோற்கடிக்க முடியும். 2012 உ.பி சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. உத்தரகண்ட், மணிப்பூரில் காங்கிரஸும், பஞ்சாபில் அகாலி தளமும் வெற்றி பெற்றன. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வேறு விதமாக இருந்தது.
உ.பி.யில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டுமானால், சமூக தளத்தை விரிவுபடுத்துவது இன்றியமையாதது. கூட்டு எதிரணியின் சமூக அடித்தளம் இன்று இருப்பதை விட பெரிதாக இருக்க வேண்டும்.. அது யாதவ் அல்லாத OBC களாக இருந்தாலும் சரி அல்லது தலித்துகள் அல்லது முன்னோடி வகுப்பினரை மேலும் ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் சரி.
பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவை எடுத்துக் கொண்டால் – தோராயமாக 200 (லோக்சபா) இடங்கள் உள்ளன, பாஜக பிரபலத்தின் உச்சத்தில் இருந்த போது கூட, அங்கு அக்கட்சியால் 50 இடங்களையே வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ள 350 இடங்களை பாஜக முழுமையாக கைப்பற்றியது.
இது உங்களுக்கு எதை காட்டுகிறது என்றால், காங்கிரஸ் அல்லது திரிணாமுல் அல்லது வேறு ஏதேனும் கட்சி அல்லது இந்தக் கட்சிகளின் கூட்டணி தங்களை மறுசீரமைத்து, தங்கள் வளங்களையும் வியூகங்களையும் மறுதொடக்கம் செய்தால், அந்த 200 இடங்களில் சுமார் 100 இடங்களை கைப்பற்ற முடியும் என வைத்துக் கொண்டால், அப்போதைய எண்ணிக்கையில் கூட எதிர்க்கட்சி 250-260ஐ எட்டலாம்.
எனவே, வடக்கு மற்றும் மேற்கில் மேலும் 100 இடங்களை வெல்வதன் மூலம் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமாகும். 2024ல் வலுவான போராட்டத்தை கொடுக்கக்கூடிய எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்க உதவ விரும்புகிறேன்” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.