டாடா குழுமத்திடம் வார இறுதியில் ஒப்படைக்கப்படுகிறது ஏா் இந்தியா
கடனில் சிக்கிய ஏா் இந்தியா விமான நிறுவனம் நடப்பு வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடனில் சிக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிரிவான டலேஸ் நிறுவனத்துக்குக் கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.18,000 கோடிக்கு மத்திய அரசு விற்றது. அத்தொகையில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.
ஏா் இந்தியாவை விற்பதற்கான இறுதி ஒப்பந்தத்தில் மத்திய அரசும் டலேஸ் நிறுவனமும் கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி கையொப்பமிட்டன. இந்நிலையில், மீதமுள்ள சில நடைமுறைகள் விரைவில் முடிக்கப்பட்டு நடப்பு வார இறுதியில் ஏா் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
அந்த ஒப்பந்தத்தின்படி, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏா் இந்தியா எஸ்ஏடிஎஸ் சேவை வழங்கல் நிறுவனத்தின் 50 சதவீதப் பங்குகள் ஆகியவையும் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதன் மூலமாக, டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரும் 3-ஆவது விமான நிறுவனமாகவுள்ளது ஏா் இந்தியா.
ஏற்கெனவே ஏா் ஏசியா இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களில் டாடா சன்ஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.