மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மறைந்த உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட நான்கு பேருக்கு 2022ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் மறைவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைமை தளபதி பிபின் ராவத், நாட்டிற்கு செய்த சேவையை கெளரவிக்கும் வகையில், அவருக்கு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.