அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின வாழ்த்து
குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய அவசரத் தேவை என கூறியுள்ளார்.
நாட்டின் 73வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்திலிருந்து ஏராளமானோர் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களையும், தியாகிகளையும் அடையாளம் கண்டு அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு பாரதிய குடிமகனின் உள்ளத்திலும் நிரந்தரக் கோயில் கொண்டுள்ள ஸ்ரீராமனின் வாழ்க்கையை கம்பர் பாடிக்கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், நாமெல்லாம் நாயன்மார்கள், ஆழ்வார்கள், அவ்வை மற்றும் ஆண்டாளின் பெருமைக்குரிய குழந்தைகளாவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அரசுப் பள்ளிகள் மட்டுமே ஏழைகளுக்கான நம்பிக்கை என கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாகவும், தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டியது நம்முடைய அவசரத் தேவை என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.