இரு மாநிலங்களில் தேசிய கொடியேற்றிய தமிழிசை சௌந்தரராஜன்

நாடு முழுதும் 73வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தெலுங்கானா விற்கும் ஆளுநராக இவர் உள்ளதால் இவர் 7:30 மணிக்கு தெலுங்கானாவில் தேசிய கொடியை ஏற்றி விட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார்.
புதுச்சேரியில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசின் ஜவகர் பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்ட காவல்துறையின் சிறந்த சேவை புரிந்தவருக்கான விருதினை துணைநிலை ஆளுநர் தமிழிசை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் குறைந்த அளவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டிருந்தனர். விழாவையொட்டி கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குடியரசு தினத்தை யொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வெளியிட்ட உரையில், தேசிய அளவில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி திகழ்கிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் பொதுப்போக்குவரத்து வாகன இயக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை துவக்கி பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக 5 கடற்கரைகள் பகுதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் வில்லியனூர் “சுடுமண் பொம்மைகள்” மற்றும் திருக்கனூர் காகித பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படும் தொழில்நுட்பக்கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தும் முயற்சியாக முதலாவது மாநில பல்கலைக்கழகமாக புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசு தின செய்தியில் துணைநிலை ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய குடியரசு தினம், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்நாள் ஆகும். புதுச்சேரி மக்களுக்கும், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்முடைய தேசியத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும்- இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகக் கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.