உள்ளாட்சித் தேர்தல்… 2 மடங்காக உயர்ந்த டெபாசிட் தொகை.. வேட்பாளர் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம்?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், வேட்பாளர்களின் வைப்புத் தொகை (Deposit amount), அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வைப்புத் தொகை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வைப்புத் தொகை கடந்த முறையை விட 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.2000, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.4000 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இதில் பாதி தொகையை செலுத்தினால் போதும்.
தேர்தல் செலவீனங்கள்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறுபவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட இயலாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் – ரூ.17,000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (முதல் மற்றும் இரண்டாம் நிலை) – ரூ.34,000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை) – ரூ.85,000, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக) – ரூ.85,000, பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் – ரூ.90,000 வரை அதிகபட்சமாக செலவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.