அவிநாசி அருகே பதுங்கியிருக்கும் சிறுத்தையின் காலடித்தடம், எச்சங்கள் கண்டுபிடிப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தப்பியோடிய சிறுத்தை அவினாசி அருகே பொங்குபாளையம் பகுதியில் இருப்பதை உறுதி செய்துள்ள வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அவிநாசி அருகே பாப்பாங்குளம் சோளக் காட்டில் கடந்த 24ஆம் தேதி பதுங்கி இருந்த சிறுத்தை 2 விவசாயிகள் உள்பட 5 பேரை தாக்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சோளக்காட்டில் இருந்து தப்பிய சிறுத்தை சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பாப்பாங்குளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாநல்லூர் அருகே சிறுத்தை சாலையை கடந்து செல்வதை அவ்வழியாக காரில் சென்ற ஒரு குடும்பத்தினர் பார்த்துள்ளனர். உடனடியாக அந்த தகவலை அவிநாசி நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது துரை என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை தப்பியோடிய சிறுத்தையுடையது தான் என வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து பொங்குபாளையம், கிருஷ்ணா நகர், எஸ்.பி.கே நகர், கோனக்காடு, எட்டம்மபெரிச்சங்காடு, தட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய 20 மோஷன் சென்சார் வகை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.