இலங்கையில் நாளாந்தம் 2 ஆயிரம் பேருக்குக் கொரோனா! – சுகாதாரப் பிரிவு அபாய எச்சரிக்கை.
இலங்கையில் நாளாந்தம் சுமார் இரண்டாயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையில் தற்போது இனங்காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. சரியான தரவுகள் ஊடகங்களில் வெளியாகாவிட்டாலும் நாளாந்தம் 2 ஆயிரம் வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனா்.
நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதையடுத்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன.
அதேபோன்று அநேகமான சிகிச்சை மத்திய நிலையங்களிலுள்ள இடவசதி நிறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த அநேகமான சிகிச்சை மத்திய நிலையங்கள் மீணடும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை எதிர்காலத்தில் சுகாதாரத்துறையினரால் சமாளிக்க முடியாத அளவுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம். தற்போதுள்ள நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன” – என்றார்.
எவ்வாறாயினும், தேவைக்கு ஏற்ப வைத்தியசாலைகளின் கொள்ளளவை அதிகரிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.