அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 20 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் கடைசியாக நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்திலிருந்து சில முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியில், T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பிடித்திருந்த குசல் பெரேரா, உப தலைவர் தனன்ஜய டி சில்வா, ஓய்வை அறிவித்து மீண்டும் ஓய்வுபெறும் முடிவை திரும்பப்பெற்றிருந்த பானுக ராஜபக்ஷ மற்றும் அகில தனன்ஜய ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
குசல் பெரேரா உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தனன்ஜய டி சில்வாவுக்கு பதிலாக உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்க உப தலைவராக செயற்பட, அணியின் தலைவராக தசுன் ஷானக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
T20 உலகக்கிண்ணத்தில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த பானுக ராஜபக்ஷ உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 2 கிலோமீற்றர் ஓட்டத்தை 09.11 செக்கன்களில் நிறைவுசெய்திருந்ததோடு, இவருடைய உடற்பருமன் பரிசோதனை அளவு (Skin folds) 115 ஆக அதிகரித்துள்ளது. எனவே, இவர் உடற்தகுதி காரணமாக தொடரை தவறவிட்டுள்ளார்.
இதேவேளை சில புதிய வீரர்களுக்கான வாய்ப்பு அவுஸ்திரேலிய தொடரில் வழங்கப்பட்டுள்ளதுடன், தடைக்கு முகங்கொடுத்து மீண்டும் திரும்பியுள்ள குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் அவுஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில், குசல் மெண்டிஸ் ஜிம்பாப்வே தொடரில் விளையாடியிருந்ததுடன், தனுஷ்க குணதிலக்க லங்கா பிரீமியர் லீக்கை தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார். எவ்வாறாயினும், நிரோஷன் டிக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புதிய வீரர்களாக வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார இடம்பெற்றுள்ளதுடன், கொவிட்-19 தொற்று காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிட்டிருந்த ஜனித் லியனகே மற்றும் கமில் மிஷார ஆகியோர் தேசிய அணியின் வாய்ப்பை மீண்டும் பெற்றுள்ளனர். இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், லங்கா பிரீமியர் லீக்கில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த வனிந்து ஹஸரங்க அவுஸ்திரேலிய தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், T20 உலகக்கிண்ணத்தொடரை தவறவிட்டிருந்த ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் T20I குழாத்தில் இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.
சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் அடுத்த மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தசுன் ஷானக (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ (விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமிக்காக காத்திருப்பு)