உக்ரைன் மீது படையெடுத்தால்.. ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும். அமெரிக்கா மிரட்டல்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. ஆனாலும் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷியாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.
உக்ரைன் தன் எல்லைகளை ஒருபுறம் ரஷியாவோடும், மற்றொரு புறம் ஐரோப்பிய நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கிறது.
நேட்டோவில் இணைக்க விருப்பம்
இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்து கொள்ள விரும்புகிறது. ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.
உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
போர் பதற்றம் அதிகரிப்பு
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
ரஷியா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இருநாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதின் மீது பொருளாதார தடை
இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ஜனாதிபதி ஜோ பைடனிடம் உக்ரைன் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது ஒரு பத்திரிகையாளர் “உக்ரைன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் ரஷிய அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோ பைடன் “ஆம், உக்ரைனுக்குள் ரஷியா ஊடுருவினால் நிச்சயமாக புதின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “ரஷியா, உக்ரைன் மீது படையெடுத்தால் அது, 2-ம் உலக போருக்கு பிந்தைய மிகப்பெரிய படையெடுப்பாக அமையும். இது நடந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ரஷியா எதிர்கொள்ளவேண்டி வரும்.
போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை, அமைதியான சூழலை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை எங்கள் நாடு ஆதரிக்கும்” எனவும் கூறினார்.