பாஜகவின் கோவா ட்விஸ்ட்.. 45 ஆண்டுகால கவுரவத்தை இழக்கிறதா காங்கிரஸ்?
தனக்கெதிராக பாஜக மருமகளை வேட்பாளராக்கிய நிலையில் காங்கிரஸுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் கோவா முதல்வரும், பழம்பெரும் தலைவருமான பிரதாப் சிங் ரானே. இதன் மூலம் 45 ஆண்டுகால பெருமையை காங்கிரஸ் இழக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுள் ஒன்றாக 35 தொகுதிகளை உள்ளடக்கிய கோவா மாநிலத்துக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுடன் களத்தில் மல்லுக்கட்டி வரும் காங்கிரசுக்கு எதிர்பாராதவகையில் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் ரானே. இவருக்கு வயது 82.
6 முறை முதல்வராக இருந்த பிரதாப் சிங் ரானே, காங்கிரஸ் கட்சி 1980ல் முதல் முறையாக கோவா மாநிலத்தில் ஆட்சியமைத்த போது, முதல் காங்கிரஸ் முதல்வர் என்ற பெருமையை பெற்றார். கோவா மாநிலத்தின் Poriem சட்டமன்ற தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர். 11 முறை அந்த தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட தோல்வியை தழுவியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கோவாவின் நீண்டகாலம் முதல்வராக இருந்த பெருமைக்குரிய ரானேவுக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் Poriem தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. கடந்த சனிக்கிழமையன்று பனாஜியில் உள்ள ஓட்டல் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட்டத்திலும் ரானே கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரானே பின்வாங்கியிருக்கிறார்.
அவரின் இந்த அறிவிப்பு காங்கிரசுக்கு இடியை இறக்கியதைப் போல அமைந்துள்ளது. இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான ரானே தொடர்ந்து 45 ஆண்டுகாலம் Poriem தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
பாஜகவின் ட்விஸ்ட்:
Poriem தொகுதியின் பாஜக வேட்பாளராக, பிரதாப் சிங் ரானேவின் மருமகள் தேவியா விஸ்வஜீத் ரானே கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரானேவின் தேர்தல் பின்வாங்குதல் முடிவு அமைந்துள்ளதால் கோவா அரசியலில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதாப் சிங் ரானேவின் மகன் விஸ்வஜீத் ரானே காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜக அரசில் அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த முறை Vishwajeet Rane, Poriem தொகுதியில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஸ்வஜீத்தின் மனைவியை பாஜக அந்த தொகுதியில் வேட்பாளராக்கி இருக்கிறது. அதே நேரத்தில் விஸ்வஜீத் அருகாமையில் உள்ள Valpoi தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதாப் சிங் ரானேவின் திடீர் விலகல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது, “போரியம் தொகுதி பிரதாப் சிங் ரானேவின் அடையாளமாக இருந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக அவர் பணியாற்றியுள்ளார். எங்களைப் பொறுத்த வரையில், அவரை வேட்பாளராக அறிவித்துவிட்டோம், நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள் அல்லது உங்கள் விருப்பப்படியான பெயரை தலைமைக்கு பரிந்துரையுங்கள் என அவரிடம் கூறியுள்ளோம்.” என தெரிவித்தார்.