பசளைத் திட்டத்தில் விரைவில் நன்மை கிடைக்கும்……
ஜனாதிபதியின் சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விசேட அபிவிருத்தி நன்கொடை நிதி மூலத்தின் கீழ் வடக்கு மாகாண சபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சேதன பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகளுக்கு மல்ரி சொப்பர் இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா விவசாய திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதில் அதிதியாக கலந்து கொண்டு இயந்திரங்களை கையளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சேதன பசளை உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தி செய்யக் கூடிய பொது அமைப்புக்கள் என 35 பேருக்கு சேதனைப் பசளை உற்பத்திக்கான ´மல்ரி சொப்பர்´ என்ற இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கொண்டு வந்துள்ள சேதனப் பசளைத் திட்டம் இப்பொழுது விவசாயிகளுக்கு நெருக்கடியாக இருந்தாலும் வருங்காலத்தில் அல்லது இந்த வருட நடுப்பகுதி அல்லது இறுதிப் பகுதியில் சிறந்த நன்மையைப் பயக்கும் என்பதில் மாற்றமில்லை.
வவுனியா மாவட்டத்தில் சிறு நீரக நோய் என்பது கிருமி நாசினி மற்றும் அசேதனப் பசளை என்பவற்றால் ஏற்பட்ட தாக்கம். இதனை வைத்தியர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சேதனப் பசளையால் அபிவிருத்தியடைந்த நாடுகள் பெறும் நன்மைகளைப் போல் எமது மாவட்டம் மட்டுமன்றி நாடும் முன்னேற்றமடையும். சிறிது காலம் விவசாயிகள் கஷ்டப்பட வேண்டியுள்ளது. பின்னர் அவர்களுக்கு நல்லதாக அமையும் எனத் தெரிவித்தார்.