புத்தம் புதுப்பொழிவுடன் பயணிகளை வரவேற்கும் ஏர் இந்தியா விமானங்கள் – அசத்துகிறது டாடா நிறுவனம்!
டாடா நிறுவனம் சார்பில் விமானங்களை புதுப்பொலிவுடன் மாற்றும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ஜனவரி 28, வெள்ளிக்கிழமை முதல், ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் புதிய மாற்றங்களை காண உள்ளனர்.
பயணிகளை வரவேற்க பைலட்டுகள் மூலமாக சிறப்பு அறிவிப்பை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் இயக்கத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஜனவரி 28ஆம் தேதி புறப்படும் அனைத்து விமானங்களிலும் விமானம் புறப்படுவதற்கு முன்பாக பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பை பைலட்கள் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அன்பான வாடிக்கையாளர்களே!.. நான் உங்கள் கேப்டன் பேசுகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த விமானத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாகும். இன்றைய தினத்தில் ஏர்-இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடா குழும நிறுவனங்களில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஒவ்வொரு ஏர் இந்தியா விமானத்திலும் அர்ப்பணிப்பு மற்றும் அன்பு ஆகியவை நிறைந்திருக்கும்’’ என்று பைலட் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு பயணிகளை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
”ஏர் இந்தியாவின் எதிர்காலத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த பயணத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம், நன்றி!’’ என்று பயணிகள் இறங்குவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாடா குழும நிறுவனங்களின் தலைவரான ரத்தன் டாடாவின் சிறப்பு வாழ்த்துச் செய்தியை பயணிகள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக cnbctv18 தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஏராளமான புதுப்பொலிவு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. விமானத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நேர்த்தியாக உடை அணிந்து, மிக அழகாக காட்சி அளிக்கின்றனர். விமானங்களை தக்க சமயத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளை விருந்தினர்கள் என அழைக்கவும், விமானத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்களை ஏற்கனவே டாடா நிறுவனம் நடத்தி வரும் நிலையில், தற்போது ஏர் இந்தியாவும் இணைந்துள்ளதால் விமான போக்குவரத்து துறையில் மிக முக்கியமான இடத்தை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, இன்டிகோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக விமான சேவைகளை கொண்ட நிறுவனம் என்ற பெயரை டாடா நிறுவனம் பெறுகிறது.
முன்னதாக, பெரிய அளவில் கடனில் சிக்கி தவித்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியது. ஆனால், ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தை தொடங்கியதும் டாட்டா குழுமம் தான். அந்த வகையில் 69 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மும்பையில் உள்ள டாட்டா இல்லத்துக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.