பெகாஸஸ் மென்பொருளை இஸ்ரேலிடம் 2017-இல் வாங்கியது இந்தியா
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டில் கையொப்பமான சுமாா் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பெகாஸஸ் உளவு மென்பொருளும், ஏவுகணை அமைப்பும் முக்கியப் பங்கு வகித்ததாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
வெளிநாட்டு அரசு அமைப்புகளுக்கு மட்டுமே பெகாஸஸ் உளவு மென்பொருள் விற்கப்படுவதாக என்எஸ்ஓ நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. நாடாளுமன்றக் கூட்டத்தொடா்களிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மத்திய அரசு பதிலளிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் சிறப்பு நிபுணா் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபரில் அமைத்தது. அந்த வழக்கு விசாரணையின்போதுகூட மற்றவா்களை உளவறிய பெகாஸஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? இல்லையா என்பது தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில், பெகாஸஸ் உளவு மென்பொருள் தொடா்பாக நியூயாா்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையில், ‘‘பெகாஸஸ் மென்பொருளை என்எஸ்ஓ நிறுவனம் சுமாா் 10 ஆண்டுகளாக வெளிநாடுகளின் விசாரணை அமைப்புகளுக்கும், உளவு அமைப்புகளுக்கும் விற்று வருகிறது. அந்த மென்பொருள் வாயிலாக ஐஃபோன் உள்ளிட்ட எந்தவொரு கைப்பேசியிலும் ஊடுருவி தகவல்களைப் பெற முடியும்.
முதல் பயணம்: பாலஸ்தீனா்களின் நலனுக்காகக் குரல் கொடுத்து வந்த இந்தியா, இஸ்ரேலுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புறவைக் கொள்ளாமல் இருந்தது. ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரதமா் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமரும் அவரே.
அவருக்கு அப்போதைய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சிறப்பான வரவேற்பு அளித்தாா். இஸ்ரேலிடமிருந்து சுமாா் ரூ.15,000 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் பெகாஸஸ் மென்பொருளும், ஏவுகணை அமைப்பும் முக்கியப் பங்கு வகித்தது.
நிலைப்பாட்டில் மாற்றம்: பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புக்கு பாா்வையாளா் அந்தஸ்து வழங்குவதற்காக ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முதல் முறையாக இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்பிஐ-யும் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி வந்தது. கடந்த ஆண்டு கோடைக் காலத்தின்போது அந்த மென்பொருளை இனி பயன்படுத்த வேண்டாம் என எஃப்பிஐ முடிவெடுத்தது. அந்த சமயத்தில்தான், பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உலகின் பல்வேறு பகுதிகளில் அரசியல்வாதிகளும், பத்திரிகையாளா்களும் உளவு பாா்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
பலன்களும் எதிா்விளைவுகளும்: பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அந்த மென்பொருள் விசாரணை அமைப்புகளின் பணியை எளிதாக்கியுள்ளது. அதே வேளையில், அந்த மென்பொருளை சில நாடுகள் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளன. மெக்ஸிகோ, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அவற்றில் அடங்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்படும்: காங்கிரஸ்
பெகாஸஸ் விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டுக்கு துரோகமிழைத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
நியூயாா்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘எதிா்க்கட்சித் தலைவா்கள், நீதித் துறை அதிகாரிகள், மக்கள் உள்ளிட்டோரின் கைப்பேசிகளை ஊடுருவுவதற்காக பெகாஸஸ் மென்பொருளை மோடி அரசு வாங்கியுள்ளது. இது தேசத் துரோகம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது; நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி பெகாஸஸ் மென்பொருளை சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்து ஜனநாயகத்தையே புதைகுழிக்குள் தள்ளியுள்ளது மோடி அரசு. 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாகவே இந்த தேசத் துரோகத்தை பாஜக இழைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக பிரதமரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். மத்திய அரசு தவறான தகவல்களை வழங்கியது தொடா்பாக உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும்’’ என்றாா்.
மத்திய அமைச்சா் விமா்சனம்: மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளனா். அதே வேளையில், ‘‘நியூயாா்க் டைம்ஸ் இதழானது பணம் பெற்றுக்கொண்டு கட்டுரைகளை வெளியிடும் ஊடக நிறுவனம்’’ என்று மத்திய அமைச்சா் வி.கே.சிங் விமா்சித்துள்ளாா்.
இதனிடையே, பெகாஸஸ் விவகாரத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்காணித்து வருவதாகவும், ஆய்வுக்குப் பிறகு அக்குழு அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.