திருச்சி மாநகராட்சி தேர்தல்: நான்கு இடங்கள் மட்டுமே ஒதுக்கியதால் காங்கிரஸ் அதிர்ச்சி
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ள திமுக இதற்கு ஏற்க கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சியில் மொத்தமுள்ள, 65 வார்டுகளில், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு பங்கீடு செய்வதற்கான இறுதிக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்குவது, எந்தெந்த வார்டுகள் ஒதுக்குவது என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியில், திமுகவுக்கு, 50 வார்டுகள், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு, 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் திமுகவை சேர்ந்தவர் தான் மேயர் என்பது உறுதியாகி இருக்கிறது. துணைமேயர் பதவிக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே போட்டோ போட்டி இருக்கும் என தெரிகிறது.
குறிப்பாக, திமுக கூட்டணியில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை தொடர்ந்து அனுபவித்து வந்த காங்கிரசுக்கு, மாநகரம், தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டத்திற்கு தலா ஒன்று, கூடுதலாக ஒன்று என மொத்தம், 4 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவிற்கு, 2 சீட்டுகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா, 2, விடுதலைச் சிறுத்தைகள், 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகியவற்றிற்கு தலா ஒரு சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுகவின் இந்த இட ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளதால், திமுக போட்டியிட உள்ள, 51 வார்டுகளில் இருந்து, மேலும் ஒரு வார்டை மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், ‘தங்களுக்கு குறைந்தது, 8 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது.
காங்கிரசில் இடபங்கீடு குறித்து பேசும் குழுவிற்கு, திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தலைமை வகிக்கிறார். அவர் நேரடியாக வந்து, அமைச்சர் நேருவிடம் பேசினால் மட்டுமே திமுக- காங்கிரஸ் இட பங்கீடு சுமூக முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜன.31ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று மாவட்டச் செயலாளர்களுக்கு, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.