பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்த திருப்பூர் பெண்.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு!
உடுமலையைச் சேர்ந்த ஏழைப் பெண் தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தனது சேமிப்பில் இருந்து 1 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி, ஆண்டின் முதல் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிரதமர் மோடி 85 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதை யொட்டி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
ஜன.,30 தேதியானது மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மஹாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும். இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு இதனை வரவேற்ற விதத்தையும், ஒவ்வொரு மூலையிலும் உற்சாகம் எழுந்ததை நாம் மறக்க முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து, திருப்பூரில் இளநீர் விற்று வரும் தாயம்மாள் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். வறுமை நிலையிலும் பள்ளிக்கு நன்கொடை அளித்த தாயம்மாளின் செயல் பாராட்டுக்குரியது.
அவரின் இந்த உதவிக்குப் பிறகு பள்ளியானது வளர்ச்சியடைந்துள்ளது. தன் ஏழ்மையிலும் பள்ளிக்கு உதவி செய்த தாயம்மாள் அனைவராலும் பாராட்ட வேண்டியவர். அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்; சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் 2047-ல் இந்தியா பாதுகாப்புத்துறையில் வல்லரசாக இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்; இவரை போன்ற தேசிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் இருக்கும் வரை இந்தியாவால் முடியாதது ஏதுமில்லை. இது போன்று அனைவரும் கல்வி, தேச நலன் மற்றும் வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும்.
கடமையை உணரும் இடத்தில், கடமையே முதன்மையானது இருக்கும். ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. இந்தியா கல்வி மற்றும் அறிவின் புனித பூமியாக இன்றளவும் இருந்து வருகிறது. நமது நாட்டின் பெருமை நமக்கானது மட்டும் அல்ல. உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.