கோவிட் விதிகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம். ரகசிய இடத்திற்கு மாறிய பிரதமர் குடும்பம்.
கனடா அரசின் தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட கோவிட் விதிகளுக்கு எதிராக தலைநகரில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிலிருந்து எல்லை தாண்டி சென்று வரும் சரக்கு வாகன ஓட்டிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதற்கு எதிராக சரக்கு வாகன ஓட்டிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தத் தொடங்கினர். பின்னர் இப்போராட்டம் சுதந்திரப் பேரணி என்ற பெயரில் மக்கள் பங்கேற்புடன் பெரும் போராட்டமாக மாறியது.
ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என பல தரப்பு மக்களும் கையில் பதாகைகளுடன் கூடியுள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாகவும், ஆபாசமாகவும் விமர்சிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
கடுமையான குளிர் எச்சரிக்கையையும் மீறி, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். சிலர் அங்குள்ள முக்கிய போர் நினைவுச்சின்னத்தில் நடனமாடும் காட்சிகளும் வெளியாகின.
இதனை ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கானோர் குவியக்கூடும் என்பதால் பிரதமர் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.