அமைச்சர் செந்தில் பாலாஜி வாகனத்தை முற்றுகையிட்டு திமுகவினர் எதிர்ப்பு
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு தொடர்பாக பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆளும்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான ஆலோசனையை பல மாவட்டங்களில் முடித்துள்ளது.
அதன்படி, காங்கிரசுக்கு 4 வார்டுகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 வார்டுகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் இடங்களை ஒதுக்க கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவுடன் மதிமுக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளதால் அந்த கட்சியினர் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 மற்றும் 54வது வார்டுகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியின் பங்கேற்று திரும்பி சென்றபோது அமைச்சரின் வாகனத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பெரும்பான்மை பலம் உள்ள 2 வார்டுகளையும் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒதுககியது ஏன் அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் காரில் புறப்பட்டு சென்றார்.