வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம்: விவசாய அமைப்புகள் அறிவிப்பு
சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்த குறிப்பாணையின்படி போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது, போராட்டத்தின் போது இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, குறைந்தபட்ச ஆதரவு விலைக் குழுவை அமைப்பது போன்ற எழுத்துப்பூர்வ வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி 31ம் தேதியன்று விவசாய அமைப்புகள் நாடு முழுதும் day of betrayal அதாவது துரோக தினத்தை அனுஷ்டித்தன. நவம்பரில் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமைப்பதாக உறுதியளித்தார்.
வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றும், இழப்பீடு வழங்கப்படும் என்றும், MSP கமிட்டி அமைக்கப்பட்டது என்றும் விவசாய அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தின் அடிப்படையில் டெல்லி எல்லையில் ஓராண்டு நீடித்த போராட்டத்தை டிசம்பர் 9 ஆம் தேதி விவசாயிகளின் அமைப்பு நிறுத்தியது
இந்நிலையில் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு மீண்டும் ஒரு அறிக்கையில், “மீண்டும் நாட்டின் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசு இன்னும் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எழுத்துபூர்வ உத்தரவாதத்தில் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்கினால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை நடத்த நிர்பந்திக்கப்படுவார்கள்.
உண்மை என்னவென்றால், அரசாங்கம் இந்த பிரச்சினையில் குழு அமைப்பதை அறிவிக்கவில்லை, அல்லது குழுவின் தன்மை மற்றும் அதன் ஆணை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. டெல்லியில் அதிகார வரம்பைக் கொண்ட மத்திய அரசு அல்லது மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச அரசுகளால் வழக்குகளைத் திரும்பப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மையில், இந்த வழக்குகளில் விவசாயிகள் தொடர்ந்து நீதிமன்ற சம்மன்களைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஹரியானா அரசு மட்டும் வழக்குகளை வாபஸ் பெற சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இழப்பீடு தொடர்பாக, உ.பி. இழப்பீட்டுத் தொகை தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ” என்று விவசாய சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் புதிய விவகாரங்களாக, பால்பொருள் உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படும் ஆஸ்திரேலியாவுடனான சுதந்திர வாணிப ஒப்பந்தம் குறித்தும் எழுப்பப்பட்டுள்ளது. இதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருள் குறித்த புதிய விதிமுறைகள் விவகாரத்தையும் விவசாய சங்கங்கள் எழுப்பியுள்ளன.